டிக்கெட் தட்டுப்பாடு: திணறுகிறது ரயில்வே !!
ரயில் நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு குறைந்து வருவதால், இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த விடயத்தில் இலங்கை ரயில்வே எவ்வித அக்கறையும் காட்டவில்லை என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் போதிய பணியாளர்களை அலுவலக பணிக்கு நியமிக்காததால், அரச அச்சகத் திணைக்களத்தில் பயணச் சீட்டு அச்சடிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அச்சிடும் கருவிகள் இலங்கை ரயில்வே தலைமையகத்தில் உள்ள அச்சிடும் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால், கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, வெயங்கொடை, ராகம ரயில் நிலையங்கள் மற்றும் பல உப நிலையங்களில் வழங்குவதற்கான பயணச் சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக பிரச்சினை ஏற்படலாம் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயன்படுத்திய பயணச்சீட்டுக்களை மீண்டும் பயன்படுத்தும் முறையை மீண்டும் ஏற்படுத்தினால், புதிய பயணச்சீட்டுக்களை அச்சடிக்கும் செலவை ஓரளவு குறைக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
பயணிகள் தினமும் ரயிலைப் பயன்படுத்தினால், பருவகாலச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள சங்கம், அதே ரயில் நிலையத்தில் இருந்து திரும்பி வருவதற்கான பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.