வெள்ளம் பாதித்த பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி..!!
பெங்களூரு
கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கூறியுள்ளார். பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரூ.200 கோடி நிதி
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த பணிகளை மேற்கொள்ள ரூ.750 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நாளை (இன்று) தொடங்கும். கடந்த மே மற்றும் நடப்பு மாதங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக 141 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள், 924 கிலோ மீட்டர் நீளத்திற்கு மாவட்ட சாலைகள், 357 சிறிய பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தொடர்ந்து மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சிராடி காட் சாலை
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையால் சாலைகள் சேதம் அடைந்தன. இவற்றை சரிசெய்ய ரூ.160 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சிராடி காட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தோனகல்-கொப்பல் இடையே 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்துள்ளோம். 5, 6 நாட்களில் சிராடி காட் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும். ஆகும்பே காட் பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய ரூ.700 கோடி நிதி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு சி.சி.பட்டீல் கூறினார்.