நாளை முதல் எரிபொருள் விநியோகம் !!
வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக நாளை (21) முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று எரிபொருள் நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ, இன்று (20) தெரிவித்தார்.
அதற்கமைய 3,4,5 இறுதி இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு நாளையதினம் எரிபொருள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 0,1,2 ஆகிய இறுதி இலக்கங்களுக்கும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கும் 6,7,8,9 ஆகிய இறுதி இலக்கங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.1500, ஓட்டோக்களுக்கு ரூ.2000, கார்கள், வான் ஆகியவற்றுக்கு ரூ.7000 என்ற அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் படி எரிபொருள் விநியோகத்தை முன்னோடித் திட்டமாக 21 ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைமுறைப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்பின்னர் நாடளாவிய ரீதியில் 25ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.