;
Athirady Tamil News

எரிபொருள் பங்கீட்டு அட்டை முறையின் நன்மைகளை பலரும் வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இதனை குழப்ப முனைகின்றனர் – யாழ் மாவட்ட செயலர்!!

0

எரிபொருள் பங்கீட்டு அட்டை முறையின் நன்மைகளை பலரும் வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இதனை குழப்ப முனைகின்றனர் – யாழ் மாவட்ட செயலர்!

பொதுமக்கள் பலரும் எரிபொருள் பங்கீட்டு அட்டை முறைமையின் நன்மைகளை வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இந்த திட்டத்தை குழப்புவதற்கு முனைவதையும் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஆகவே அனைவரும் ஒத்துழைத்து இந்த முறைமை மூலம் சீரான எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மாவட்ட செயலர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், பெற்றோல் விநியோகத்தைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக இன்று முதல் 29ஆம் திகதி வரை நாளாந்தம் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. மக்கள் எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தாது அமைதியாக இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்.

டீசலை பொறுத்தவரை 8 தொடக்கம் 10 வரையான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 25ஆம் திகதி வரை தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதற்குரிய அட்டவணை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது .

இன்று எரிபொருள் விநியோகம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் பொதுமக்கள் ஒன்று கூடி நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் அதேபோன்று எரிபொருள் பெறுவதற்குரிய விதிமுறை மற்றும் அறிவுறுத்தலை பின்பற்றாமலும் இருப்பதால் அங்கு ஒரு குழப்பமான நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டிருக்கின்றன.

ஆகவே எரிபொருளை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். அரசாங்கத்தினால் தேசிய எரிபொருள் விநியோக அனுமதி பத்திர முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக 25ஆம் திகதிக்கு பின்னதாக கட்டாயமாக அமலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த முறைமை முழுமையாக அமல்படுத்தும் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே பிரதேச செயலாளர்களால் வழங்கி இருக்கின்ற எரிபொருள் விநியோக அட்டைகளை பயன்படுத்துமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இது யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விசேட ஏற்பாடு இதை தேசிய முறைமையுடன் இணைந்த வகையில் கொண்டு செல்ல முடியும். நெருக்கடியை குறைப்பதற்கு அனைவருக்கும் முறையாக இந்த பங்கு அட்டை முறையை அமல்படுத்தியிருக்கின்றோம்.வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறும்

எரிபொருள் விநியோக அட்டைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றோம்.

யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தை மிக மிக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் விநியோகிக்க ஒதுக்கி இருக்கின்றோம். அதில் எரிபொருளை நிரப்ப மாவட்ட செயலகத்தின் முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

பொதுமக்கள் பலரும் இந்த திட்டத்தினாலான நன்மைகளை வரவேற்கும் சமயம் ஒரு சிலர் இந்த திட்டத்தை குழப்புவதற்கு முனைவதையும் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. ஆகவே அனைவரும் ஒத்துழைத்து இந்த முறைமை மூலம் சீரான விநியோகத்தை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.