;
Athirady Tamil News

நேஷனல் ஹெரால்டு வழக்கு- சோனியாகாந்தி விசாரணைக்கு ஆஜர்..!!

0

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சோனியா காந்தி சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் விசாரணைக்கு ஆஜராவதில் கூடுதல் அவகாசம் கேட்டு சோனியா தரப்பில் அமலாக்கத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதை ஏற்று சோனியா ஆஜராவதற்கு 4 வாரங்களுக்கு அமலாக்கத்துறை ஒத்திவைத்தது. இந்த நிலையில் சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டார். இதையடுத்து இன்று ( 21-ந்தேதி) விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியாகாந்திக்கு 3-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். இன்று மதியம் 12 மணி அளவில் சோனியாகாந்தி தனது இல்லத்தில் இருந்து காரில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் உடன் சென்றனர். 12.20 மணி அளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் சோனியா காந்தி ஆஜரானார். அவர் முககவசம் அணிந்து இருந்தார். பெண் அதிகாரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின்போது சோனியா சோர்வடைந்ததால் அவருக்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சோனியாவுடன் சென்ற அவரது மகள் பிரியங்கா காந்தி தன் தாய்க்கு தேவையான மருந்து, மாத்திரைகளை எடுத்து சென்றார். இதனால் அவரை மட்டும் அலுவலக கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. சோனியா காந்தி ஆஜரானதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஏராளமான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதையொட்டி டெல்லி அக்பர் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மவுலானா ஆசாத் ரோடு, ஜங்ஷன் மான்சிங் ரோடு, ஜங்ஷன், கியூபாயிண்ட் ஜங்ஷன் உள்பட பல முக்கிய ரோடுகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.