“கொரோனா பாதித்தவர்களுக்கு மறதி உள்ளிட்ட நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம்” – மத்திய சுகாதாரத்துறை தகவல்..!!
கொரோனாவால் ஏற்படும் நீண்ட நாள் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், மத்திய சுகாதாரத்துறை கடந்த 2021 அக்டோபர் 21-ந்தேதி வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில் 10 முதல் 20% பேருக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனாவால் ஏற்படும் சளி, இருமல், உடல் வலி உள்ளிட்ட குறுகிய கால பாதிப்புகளில் இருந்து குணமடைந்தாலும், மறதி உள்ளிட்ட நீண்ட கால பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு முடிவுகள் கூறுவதாக மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.