;
Athirady Tamil News

உலகின் வயதான ஆண் பாண்டா கரடி ஹாங்காங் பூங்காவில் உயிரிழப்பு! படம் வரைந்து அஞ்சலி செலுத்திய குழந்தைகள்..!!

0

ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க் எனும் வனவிலங்கு பூங்காவில் உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி உயிரிழந்தது. ஓஷன் பார்க் வனவிலங்கு பூங்காவில் “ஆன்-ஆன்” என்ற ராட்சத பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வந்தது. மனிதர்களின் பராமரிப்பில் உலகிலேயே மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஆண் பாண்டா என்ற பெருமையை பெற்ற இது, வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தது. அந்த பாண்டாவிற்கு வயது 35. மனிதர்களின் வயது படி கணக்கிட்டால் இந்த பாண்டாவிற்கு 105 வயதாகிறது. 1986ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த இந்த பாண்டா அந்நாட்டிலுள்ள வாலாங் தேசிய பூங்காவில் வளர்ந்து வந்தது. பின்னர், 1999ஆம் ஆண்டு, ஜியாஜியா என்ற பெண் பாண்டாவுடன் ஹாங்காங் ஓஷன் பார்க்கிற்கு பரிசாக அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மனிதர்களின் பராமரிப்பில் நீண்ட நாள் வாழும் ராட்சத பாண்டா என்ற பெருமையை 2017ஆம் ஆண்டில் பெற்றது. கடந்த வருடம் ஆகஸ்ட மாதம் இந்த பாண்டா காரடி. தனது 35வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

ஆன்-ஆன்னின் உயிரிழப்பு, பாண்டா பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த பாண்டாவிற்காக ஓஷன் பார்க்கில் தனி பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பூங்கா உழியர்களும், சுற்றுலா பயணிகளும் மலர் கொத்துக்களை வைத்து உயிரிழந்த பாண்டாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், அங்கு வரும் குழந்தைகளும் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டும், பாண்டாவின் படத்தை வரைந்தும் ஆன்-ஆன் பாண்டாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாண்டாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் சுற்றுலா பயணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஓஷன் பார்க் அறிக்கையை வெளியிட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஓஷன் தீம் பார்க், பாண்டாவின் உடல் நிலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மோசமடைந்து வந்ததாகவும், அதனால் ஆன்-ஆன் உணவு உட்கொள்ளும் அளவு குறைந்து, இறுதியில் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டது என்றும் தெரிவித்தனர். அதன் பிறகு யார் கண்களிலும் படாமல் வைக்கப்பட்டிருந்த ஆன்-ஆன் நேற்று உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஓஷன் பார்க் பூங்காவில் மேலும் இரண்டு பாண்டாக்கள் உள்ளன. ஆன்-ஆன் பாண்டாவின் உயிரிழப்பால் வாடியுள்ள சுற்றுலா பயணிகளுக்கு மற்ற இரண்டு பாண்டாக்கள் ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிக வயதான பாண்டா கரடி “ஜியா-ஜியா” என்ற பெண் பாண்டா தனது 38வது வயதில் 2016ம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.