நாட்டின் நன்மை கருதி புதிய அரசாங்கத்திற்கு நாட்டை மீட்க சில காலங்களை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி.!!
காலிமுத்திடல் டீல் கோ கமவில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு போராட்டக்காரர்களை விவாதத்திற்கு அழைக்க ஒரு சந்தர்ப்பம் இருந்தது. போராட்டக்காரர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அடுத்த 6 மாதங்களுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து போராட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி விளக்கியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு நிறையவே இருந்தது. அதன் மூலமாக போராட்டக்காரர்கள் எமது நாட்டின் தற்போதைய நிலைமையை புரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. போராட்டக்காரர்களின் உண்மையான போராட்டம் வெற்றியடைந்து மக்கள் சக்தியைக் காட்டுவதில் போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இது போன்ற ஒரு முக்கியமான தருணத்தில் ஒரு அரசாங்கத்தை அமைக்க ஒரு வழிமுறை இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்களின் உடனடித் தேவையை வழங்க இன்றைய நிலையில் குறைந்தபட்சம் 3-6 மாதங்கள் தேவைப்படும் என்று நம்புகிறேன்.
இப்போது எமது நாட்டில் நாளுக்கு நாள், மக்கள் வேலையிழக்கிறார்கள், தனியார் துறைகள் மூடப்படுகின்றன, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது, அந்நிய செலாவணி வரத்து மிகவும் குறைந்துள்ளது, எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து சிக்கல் போன்றவற்றால் பல தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் இருக்கிறது, பசி மற்றும் மருந்துகள் கிடைக்காமையினால் மக்கள் இறக்க நேரிடுகிறது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகரித்துள்ளது, கிடைக்கும் உணவு, மருந்துகள், எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு கறுப்புச் சந்தையை உருவாகும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது.
மக்களின் இந்த போராட்டம் தொடர்ந்தால், நிச்சயமாக நம் நாட்டிற்கு வெளிநாட்டு நாணய வரவுகளை ஈர்க்கும் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போகும், வெளிநாட்டு உதவிகள் கடன்கள் கிடைக்கும் வழிமுறை இல்லாது போகியுள்ளது. இது நாட்டின் நிலைமையை இன்னும் மோசமாக்கும். இதன் விளைவாக மக்கள் பசி, மருந்து இல்லாமல் உயிரிழக்க நேரிடும். இந்த நாடு யாரும் பார்க்க விரும்பாத, ஆயுத விற்பனையைத் தவிர முதலீடு செய்ய விரும்பாத தேசமாக மாறிவிடும். எமது நாட்டின் எதிர்காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள், இந்த அரசாங்கத்திடம் இருந்து ஒரே இரவில் நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போகிறோமா, அது ஒருபோதும் நடக்காது. எனவே அரசுக்கு ஒரு சில மாத காலக்கெடுவை வழங்கிவிட்டு நாம் அந்த நாளுக்காக பொறுமையாக காத்திருப்போம்.
இந்த அரசாங்கம் மக்கள் போராட்டத்தில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டுள்ளது. 12-18 மாதங்களுக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு முதல் கட்டமாக வாழ்க்கைச் செலவு, எரிபொருள், எரிவாயு ஆகியவற்றைக் குறைத்து, பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான சாதகமான சூழலை மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது. நான் இந்த அரசாங்கத்தின் ஆதரவாளன் என்று உங்களில் சிலர் கூறலாம். உண்மையில், எனக்கு எனது தாய்நாட்டை பற்றியதும் இந்த அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி பற்றியதும் சொந்த பார்வை உள்ளது, ஆனால் இந்த தேசத்தின் அமைதியை விரும்பும், தேசபக்தியுள்ள குடிமகனாக, சாதாரண பொதுமக்களின் இன்றைய நாட்களின் பசி, பட்டினி, வரிசையில் நிற்கும் அவலம் போன்ற வலியை உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.