3-வது நபருக்கும் தொற்று உறுதி- குரங்கு அம்மை நோய் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பு..!!
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய், கேரளா மாநிலத்திலும் பரவி உள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு முதன்முதலில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் தனிமை படுத்தப்பட்டார். இதுபோல மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரியவந்தது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்ப பட்டது. இதில் அவருக்கும் நோய் பாதிப்பு இருப்பது உறுதி ஆனது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி இருப்பதால் மாநில சுகாதார துறையினர் நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- கேரளாவில் குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்பதை கண்டறியும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் யாருக்காவது அறிகுறி இருப்பது தெரியவந்தால், அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.