பழமையான கோவில்களை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும்..!!
மடத்துக்குளம் பகுதியில் உள்ள பழமையான கோவில்களை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை மனு விடுத்துள்ளனர். மடத்துக்குளம் பகுதி மக்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் காரத்தொழுவு தொடங்கி கல்லாபுரம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இந்த ஆற்றங்கரை ஓரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைவ, வைணவ கோவில்கள் பல கட்டப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டு வரை இவை நல்ல நிலையில் இருந்தது. பக்தர்கள் வழிபட்டு வந்தனர். காலம் மாற்றத்தின் காரணமாக தற்போது பல கோவில்கள் பழுது அடைந்துள்ளன. கொமரலிங்கம் ஆற்றுப்பாலம் பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரம் அருகிலுள்ள கிருஷ்ணர் கோவில், சிவன்கோவில், கண்ணாடிப்புத்தூரில் உள்ள சிவனகோவில், மைவாடியிலுள்ள பெருமாள் கோவில், கடத்தூரில் உள்ள கொங்குனீஸ்வரர் கோவில், பெருமாள் கோவில், காரத்தொழுவில் உள்ள பூமிநிலா சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இது குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுைகயில் பல ஆண்டுகளாக இந்த கோவில்களை பராமரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. இது குறித்த அரசு கவனம் மேற்கொண்டு கோவில்களை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் நிதியை ஒதுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.