;
Athirady Tamil News

வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் இருப்பு..!!

0

உடுமலை சுற்றுவட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் வகையில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தரமற்ற விதை

உடுமலை வட்டாரத்தில் மானாவாரி மற்றும் இறவைப் பாசனத்தில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி நடைபெற்று வருகிறது. அதிக மகசூலைக் கருத்தில் கொண்டு வீரிய ஒட்டு ரக மக்காச்சோளங்களையே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தனியார் நிறுவனங்கள் பல்வேறு விதமான விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி விவசாயிகளிடம் விதைகள் விற்பனை செய்கின்றனர். கடந்த காலங்களில் ஒரு சில நிறுவனங்கள் தரமற்ற விதைகளை விற்பனை செய்ததால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்கும் வகையில் தற்போது தரமான சான்று பெற்ற வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள் வேளாண்மைத்துறையின் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

படைப்புழு எதிர்ப்பு

இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:- ‘கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டு ரகமான கோஎச்எம்-8 மக்காச்சோள விதைகள் உடுமலை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் 540 கிலோ அளவுக்கு இருப்பு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 டன்னுக்கு மேல் மகசூல் தரக்கூடிய 90 முதல் 95 நாள் வயதுடைய இந்த ரகம் தானியம் மற்றும் தீவனத்துக்கும் ஏற்ற ரகமாகும். நடப்பு பருவத்துக்கு ஏற்ற ரகமான இது படைப்புழு தாக்குதலுக்கும் சற்று எதிர்ப்பு சக்தி கொண்டதாக உள்ளது. ஒரு கிலோ ரூ 325 விலையுள்ள இந்த மக்காச்சோள விதைகள் 50 சதவீத மானியத்தில் ரூ.162.50 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விதைநேர்த்தி செய்ய பெவேரியா பேசியான என்ற இயற்கை எதிர் உயிரி பூச்சிக் கொல்லி மருந்தும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வகையில் 20-வது நாள் தெளிக்க மெட்டாரைசியம் அனிசோபில் என்ற இயற்கை மருந்தும், சூடோமோனஸ், டீ விரிடி போன்ற இயற்கை பூஞ்சாணக் கொல்லி மருந்துகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

விதைகள் இருப்பு

105 நாட்கள் வயதுடைய கோ 51,110 நாட்கள் வயதுடைய ஏடிடி (ஆர்) 45,130 நாட்கள் வயதுடைய, பிரியாணி தயாரிப்புக்கு ஏற்ற வாசனை நெல் ரகமான விஜிடி ஆகிய நெல் விதைகள் மானிய விலையில் வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 75 நாட்கள் வயதுடைய வம்பன் 8 ரக உளுந்து, என்பிஜி 49 ரக கொண்டைக்கடலை விதைகளும் இருப்பு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.