பிரதமர் மோடி திறந்து வைத்த 5 நாட்களில் குண்டும் குழியுமான சாலை..!!
உத்தர பிரதேசத்தில் ரூ.14,850 கோடி செலவில் 296 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமா் மோடி ஜூலை 16ஆம் தேதிதான் திறந்துவைத்தாா். ஜலானில் இதற்காக மிகப் பிரமாண்டமான திறப்பு விழாவும் நடைபெற்றது.உத்தர பிரதேசத்தின் 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் புந்தேல்கண்ட் விரைவுச் சாலைக்கு கடந்த 2020, பிப்ரவரி 29-இல் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். 28 மாதங்களிலேயே பயன்பாட்டுக்கு வந்தது. புந்தேல்கண்ட் விரைவுச் சாலையால், சித்ரகூட் மற்றும் டெல்லி இடையிலான பயண நேரம் 3 முதல் 4 மணி நேரம் வரை குறையும். இந்தச் சாலையானது வாகனங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த புந்தேல்கண்ட் பகுதியின் வளா்ச்சிக்கும் வேகமளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில், சாலை திறக்கப்பட்டு வெறும் 5 நாள்களில் குத்ரெயில் முதல் சித்ரகூடம் செல்லும் பகுதியில் சாலை பலத்த சேதமடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜலானில் பெய்த கனமழை காரணமாக சாலையில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக செப்பனிடும் பணி நடைபெற்றதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
இதுபோலவே, அவுரியா பகுதியிலும் சாலையின் ஒரு பகுதி கனமழையால் அடித்துச் செல்லப்பட்டு சேதம் ஏற்பட்டதாகவும், உடனடியாக செப்பனிடும் பணிகள் நடந்து முடிந்ததாகவும் கூறப்பட்டது. போர்க்கால அடிப்படையில் சாலை மற்றும் சாலைத் தடுப்புகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெர்வித்துள்ள பா.ஜ.க வின் வருண் காந்தி, “ரூ15,000 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த விரைவுச் சாலை, 5 நாள்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை . அப்படியானால் இந்த விரைவுச்சாலையின் தரம்தான் என்ன? இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் “முடிவடையாத திட்டங்களை முடித்ததாகக் காட்டியுள்ளதற்கு இது ஒரு உதாரணம். புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை மிகப் பெரிய மனிதர்கள்தான் திறந்து வைத்தனர். ஆனால் ஒரே ஒரு வாரத்திலே ஊழல் குழிகள் வெளியே வந்துவிட்டன. நல்லவேளை இதில் விமான ஓடுபாதைகளை அமைக்கவில்லை” என அதன் படங்களையும் இணைத்துள்ளார்.