புகைப்பிடிப்பதை நிறுத்தினால் கொரோனா வராது – உண்மையா? (மருத்துவம்)
“புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்” என்ற வாசகத்தை பார்க்காத இடம் இல்லை. இதனை பார்த்து தான் சிகரெட் உடலுக்கு கேடு என்று தெரிய வேண்டியதில்லை. இருப்பினும், தவறு என்று தெரிந்தே செய்பவர்களை என்ன செய்ய முடியும். கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது முதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை பற்றிய பயமும் பலருக்கு அதிகரித்து விட்டது என்றே கூறலாம். ஏனென்றால், புகைப்பிடிப்பவர்களுக்கு கோவிட்-19 ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே, கொரோனா வைரஸிடம் இருந்து உங்களை காத்துக் கொள்ள வேண்டுமெனில், புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்திடுங்கள்.
கோவிட்-19 தொற்றுநோய் பரவ தொடங்கியதிலிருந்து, பிரிட்டனில் மட்டும் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர். இதேபோன்று, உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், சில ஆய்வுகள் புகையிலையை வேறு வடிவத்தில் உட்கொள்ளும் பழக்கமும் அதிகரித்துள்ளது என்று கூறுகிறது.
உலக சுகாதார மையம் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து சுகாதார அமைப்புகளும், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு மிக அதிக அளவு உள்ளது என்று தெரிவிக்கின்றன. இது காரணமாக கூறப்படுவது, புகைபிடிப்பவர்களின் மூக்கு மற்றும் வாயில் ACE2 ஏற்பிகள் அதிக அளவில் இருக்கலாம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ACE2 ஏற்பிகளானது, உடலில் கோவிட்-19 ஐ ஏற்படுத்தக்கூடிய கொரோனா வைரஸின் நுழைவு புள்ளிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
கோவிட்-19 முதன்மையாக பாதிப்பது நுரையீரலை தான். நீண்ட காலமாக புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலானது மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதால், அவர்களிடம் வைரஸ் தொற்றை சமாளிக்க திறன் மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் தான், புகைப்பிடிப்பவர்களுக்கு கோவிட்-19-ன் பாதிப்பு அதிக அளவில் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, உடலில் மிக முக்கிய பாகங்களான, இதயம், சிறுநீரகம் உட்பட பல்வேறு பாகங்களை வைரஸ் சேதப்படுத்தலாம். எனவே, வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியமான உடல், கோவிட்-19 இன் தீவிரத்தை குறைக்க உதவுவதோடு, நோய் காரணமாக ஏற்படக்கூடும் இறப்பின் அபாயத்தையும் குறைத்திட உதவும்.
நோய் தொற்றின் அறிகுறி ஏதாவது தெரிந்த உடனே பலரும் செய்யக் கூடிய விஷயம், புகைப்பழக்கத்தை விட்டுவிடுவது. ஆனால், அப்படி செய்வது மிகவும் தாமதமான செயலென்றே கருதப்படுகிறது. பல மாதங்களாக, பல வருடங்களாக புகைப்பழக்கம் இருப்பவர்கள், புகைப்பழக்கத்தை விட்ட ஒரு வாரத்திலேயே அனைத்தும் சரி ஆகிவிடும் என்று நினைத்தால் அது எப்படி சரியாகும்? புகைப்பழக்கத்தின் போது ஏற்பட்ட உள்ளுறுப்பு பாதிப்புகள், சில நாட்களில் எப்படி சரியாகும்? இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உண்மையாக இருக்கக்கூடும் என்றாலும், புகைப்பிடிப்பதை விட்டுவிடுவதன் நேர்மறையான விளைவுகளை, பழக்கத்தை நிறுத்திய ஓரிரு நாளிலேயே காணலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. காலப்போக்கில் நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுவதால் சேதமடைந்த நுரையீரலும் படிப்படியாக குணமடைந்துவிடும்.
உங்களுக்கு புகைப்பழக்கத்தை விட்டுவிடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டதா? இருந்தாலும், அதை எப்படி விடுவது என்று தெரியாமல், கஷ்டப்படுகிறீர்களா? அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இங்கே 5 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் உங்களுக்கு ஏதுவான ஒன்றை பின்பற்றி புகைப்பழக்கத்தில் இருந்து வெளிவந்து, உங்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
புகைப்பழக்கத்தை விடுவதற்கு உதவும் ஒரு எளிய வழி டைரி எழுதும் பழக்கம். ஒரு நாளில் எத்தனை முறை புகைப்பிடிக்கிறீர்களோ, அப்போதெல்லாம் டைரியில் குறித்து வாருங்கள். அதனை பார்த்து நாளொன்றிற்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டு, பின்னர் படிப்படியாக குறைக்கலாம். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
புகைப்பழக்கத்தை கைவிட பயன்படுத்தப்படும் பொதுவான வழிகளில் ஒன்று நிக்கோட்டின் தெரபி. சிறு அளவு நிக்கோட்டினை எடுத்துக் கொள்ளும் போது, புகைப்பிடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றாமல் தடுத்திடலாம். இதன் மூலம், புகைப்பழக்கத்தை சுலபமாக விட்டுவிடலாம்.
இது என்ஆர்டியை நிர்வகிப்பதற்கான ஒரு வழியாகும். உங்கள் கையில் ஒரு நிக்கோட்டின் ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ளவும். இது உங்களை புகைபிடிப்பதைத் தடுக்கும் பொருட்டு, உடலில் கட்டுப்படுத்தப்பட்ட, சிறிய அளவு நிக்கோட்டினை மட்டும் பெறுவதை உறுதி செய்கிறது.
உங்களது மனநிலை குறித்து பகிர்ந்து கொள்வதால், புகைப்பழக்கத்தை சுலபமாக கைவிட உதவும். இதற்கென பல்வேறு ஆதரவு குழுக்கள் உள்ளன. அவற்றிறுடன் தொடர் சந்திப்பு, குறிப்புகள் மற்றும் தனிப்பட்ட கதைகள் கூறப்படுவதன் மூலம், புகைப்பழக்கத்தை கைவிட அதிகமான ஊக்கத்தை பெறமுடியும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அருகில் இருந்தால், புகைப்பிடிப்பதற்கான எண்ணம் மேலோங்கி, உங்களது லட்சியம் தடைப்படக்கூடும். மேலும், புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பது கூட உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடும். எனவே, புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பதையும், அவர்களுடனான தொடர்பையும் நிறுத்திக் கொள்வது நல்லது. இதன் மூலம், புகைப்பிடிப்பதற்கான எண்ணத்தை சுலபமான தவிர்த்திடலாம்.