;
Athirady Tamil News

எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாப்போம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை..!!

0

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெறும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:- 5 வருடங்களுக்கு முன்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உங்களுக்கும் உங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கான்பூர் தேஹாத் மாவட்டத்தின் பாரௌன்க் கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் வளர்ந்த ராம்நாத் கோவிந்த், இன்று நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் உரையாற்றுகிறேன். இதற்காக, நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு நான் தலை வணங்குகிறேன். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனது சொந்த கிராமத்திற்குச் சென்றதும், எனது கான்பூர் பள்ளியில் உள்ள வயதான ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவதும் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இருக்கும். நமது வேர்களோடு இணைந்திருப்பது இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு. இளைய தலைமுறையினர் தங்கள் கிராமம் அல்லது நகரம் மற்றும் அவர்களின் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்திருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடர நான் கேட்டுக்கொள்கிறேன். எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். நமது இயற்கை ஆழ்ந்த வேதனையில் உள்ளது. காலநிலை நெருக்கடி இந்த கிரகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். நமது குழந்தைகளின் நலனுக்காக நமது சுற்றுச்சூழல், நிலம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள் மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதல் குடிமகனாக, சக குடிமக்களுக்கு நான் ஒரு அறிவுரை கூற வேண்டும் என்றால், அது இதுவாகதான் இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.