நாராயணகுருவின் பெயரால் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்; மந்திரி சுனில்குமார் பேட்டி..!!
நாராயணகுரு சிலைக்கு அடிக்கல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் லேடிஹில் சர்க்கிள் பகுதியில் ரூ. 48 லட்சம் செலவில் நாராயணகுரு சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாநேற்று நடந்தது. இதில் மாநில மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கலந்துகொண்டு நாராயண குரு சிலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதைெதாடர்ந்து மந்திரி சுனில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மங்களூருவின் பிரதான சாலைக்கு பிரம்மஸ்ரீ நாராயணகுரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது நாராயணகுரு சிலையை நிறுவ அதிகாரபூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. மங்களூருவுக்கு சிறப்பான பரிமாணத்தை அளிக்கும் வகையில் மங்களூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளோம். நாராயணகுருவின் பெயரால் சமுதாயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கட்டுமான பணிகள் முடிந்து நாராயணகுருவின் சிலை திறக்கப்படும்.
அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி
சுதந்திர போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்களிப்பை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நாடகங்கள், திரைப்பட காட்சிகள் நடந்துவருகிறது.சுதந்திர தினத்தையொட்டி, கர்நாடகத்தில் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 12-ந்தேதி முதல் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும். மேலும் இளைஞர்கள் தேசியக்கொடி அணிவகுப்பு நடத்த முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வேதவியாஸ், பரத் ஷெட்டி மற்றும் மங்களூரு மாநகராட்சி மேயர் பிரேமானந்த ஷெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.