மங்களூரு-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள்..!!
மலைப்பகுதியில் மண்சரிவு
கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்தது. கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.இதனால் பலபகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் ஆகும்பே, சிராடி போன்ற மலைப்பாதை சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி டெல்லி சென்ற தட்சிண கன்னடா தொகுதி எம்.பி. நளின்குமாா் கட்டீல், மத்திய ரெயில்வேதுறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவியை சந்தித்து பேசினார். அப்போது அவர் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளின் வசதிக்காக மங்களூரு-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவி அனுமதி வழங்கினார். இந்த நிலையில் மங்களூரு-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற 26-ந் தேதி முதல் மங்களூரு-பெங்களூரு இடையே வாரத்தில் 3 நாட்கள் சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ரெயில்கள் மைசூரு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி வரை இயக்கப்படும். வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் (வண்டி எண்:- 06547) பெங்களூருவில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்(வண்டி எண்:- 06548) மங்களூருவில் இருந்து இரவு 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தை வந்து சேரும். இந்த சிறப்பு ரெயில்கள் 2 முன்பதிவில்லா பொது பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 முன்பதிவு பெட்டிகள், 2 அடுக்கு குளிசாதன பெட்டிகள் இரண்டும், 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இரண்டும் கொண்டு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.