;
Athirady Tamil News

2023 முதல் நாடுமுழுவதிலும் உள்ள எல்லா முன்பள்ளிகளுக்கும் ஒரே கல்வித்திட்டம்!! (படங்கள்)

0

2023 முதல் நாடுமுழுவதிலும் உள்ள எல்லா முன்பள்ளிகளுக்கும் ஒரே கல்வித்திட்டம்!- வடமராட்சி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கனகசபை சத்தியசீலன்

யாழ்ப்பாணம் – வடமராட்சி உடுப்பிட்டி தென்னிந்திய திருச்சபை முன்பள்ளியின் 2022 ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு முன்பள்ளியின் முன்றலில் 23.07.2022 சனிக்கிழமை பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

அருட்திரு செ. துரைரட்ணம் (சபைக்குரு) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கனகசபை சத்தியசீலன் பங்கேற்று சிறப்பித்தார்.

திரு. கனகசபை சத்தியசீலன் அவர்கள் பிரதம விருந்தினருக்கான உரையில் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பதன் ஊடாகத் தான் எதிர்காலத்தில் வழிதவறி நடக்காத நல்ல பண்புள்ள சிறார்களை சிறந்த கல்விமான்களை உருவாக்க முடியும். அதற்கு முன்பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் உந்துசக்தியாக இந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பக்க பலமாக இருக்க வேண்டும்.

முன்பள்ளி மாணவர்களை பொறுத்தவரையில் மூன்று மணித்தியாலங்கள் மட்டும் தான் ஆசிரியர்களுடன் அவர்கள் உள்ளனர். மீதி நேரமெல்லாம் பெற்றோர்கள், குடும்ப உறவுகளுடன் இருக்கின்றனர். ஆகவே, பெற்றோர்கள் தான் முன்பள்ளி பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

எங்களுடைய முன்பள்ளிகளை பொறுத்தவரையில் அனேக பெற்றோர்கள் பிள்ளைகளின் எழுத்து தொடர்பான பிரச்சினைகளில் தான் அதிகமாக குறைப்பட்டுக் கொள்கின்றனர். பாடசாலை சேர்ந்து முதலாம் தரத்தின் மூன்றாம் தவணையில் தான் பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்க வேண்டும் என கல்வியமைச்சின் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் முன்பள்ளிகளில் பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்குவதில்லை. எழுத்துகளை இனங்காண வைக்க வேண்டும். உயிரெழுத்து என்றால் என்ன, மெய்யெழுத்து என்றால் என்ன? என்ன வகையான எழுத்துகள் என்றாலும் பிள்ளைகள் அந்த எழுத்துகளை இனங்காணுவதற்கு முன்பள்ளி ஆசிரியர்கள் வழிப்படுத்த வேண்டும். பிள்ளைகளை இவ்வாறு எழுத்துகளை இனங்காண பழக்குவதனூடாகவே பின்பு தானாகவே எழுத பழகிக் கொள்கிறது.

2023 ஆம் ஆண்டிலே தேசிய முன்பள்ளி கல்விக் கொள்கைத் திட்டம் என்ற ஒன்று வருகின்றது. அந்த கல்விக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள எல்லா முன்பள்ளிகளும் ஒரே வகையான கலைத்திட்டத்தின் அடிப்படையில் தான் முன்பள்ளிகள் சகலவற்றின் கற்றல் செயற்பாடுகளும் இடம்பெற வேண்டும். அதற்குரிய செயற்பாடுகள் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2023 ஆம் ஆண்டளவில் முன்பள்ளிகளின் எழுத்துப் பழக்குதல் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் ஒரு நிலைக்கு கொண்டுவரப்படும் என்று தான் நினைக்கிறேன். எனவே முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோராகிய நீங்கள் இந்த முன்பள்ளிகளிலே பிள்ளைகளை இயங்கு நிலையில் வைத்திருக்க வேண்டும். இயங்கு நிலையில் வைத்திருத்தல் என்பது பிள்ளைகளின் விளையாட்டு, வெட்டுதல், ஓட்டுதல், கண்காட்சி, படம் வரைதல் என இப்படியான நிகழ்வுகளை செய்து பிள்ளைகளை நல்ல ஆரோக்கியமான இயல்பு நிலையில் உள்ள பிள்ளைகளாக வைத்திருந்து இவர்களை முறைசார் கல்வி தரம் 01 க்கு கையளிப்பது தான் இந்த முன்பள்ளிகளின் கடமையாக இருக்க வேண்டும்.

எனவே முன்பள்ளிப் பிள்ளைகளின் பெற்றோர்களாகிய நீங்கள் மிகுந்த அக்கறையோடு இவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். இந்த பிள்ளைகளை உடல், உள ஆளுமைத்திறன் கொண்ட பிள்ளைகளாக வளர்த்தெடுப்பதற்கு முன்பள்ளி ஆசிரியர்களுடன் அடிக்கடி கதைத்து பிள்ளைகள் தொடர்பில் அவர்களின் அபிப்பிராயங்களையும் பெற்று ஆரோக்கியமான பிள்ளைகளாக வளர்த்தெடுங்கள்.

முன்பள்ளிகள் அனைத்தும் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டவை. கிராமத்து பிள்ளைகள் கிராமத்து ஆசிரியர்கள் என இருப்பதால் முன்பள்ளிகளை தொடர்ந்தும் இயக்குவதற்கு உரிய செயற்பாடுகளை வகுக்குமாறு முன்பள்ளி நிர்வாகங்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றோம். எனவே முன்பள்ளிகள் தொடர்ந்தும் இயங்கும் நிலை இருக்குமென்றே நினைக்கின்றேன். ஒரு கிராமத்தை வளர்ப்பதற்கு முன்பள்ளிகளினுடைய செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை. எனவே முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோராகிய நீங்கள் வடலிகளாகிய பிள்ளைகள் வானுயர வளர்வதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.