சட்டவிரோதமாக கடத்திய ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்..!!
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மிர்லே அருகே சாலிகிராமம் அருகில் இருக்கும் அரிசி ஆலைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவுத்துறை அதிகாரிகள், சாலிகிராமம் போலீசாருடன் சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த அரிசி ஆலையின் வெளியே நின்ற லாரியின் பின்புறம் மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அரிசி ஆலையின் உரிமையாளரிடம், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், ஹாசனில் இருந்து அரிசி ஆலைக்கு லாரியில் ரேஷன் அரிசி வந்தது தெரியவந்தது. மேலும் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். 100 கோதுமை மூட்டைகள், 296 அரிசி மூட்டைகளுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.4.70 லட்சம் இருக்கும். கைதான அரிசி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.