குரங்கு அம்மை குறித்து இலங்கை உஷார் !!
இலங்கையும் குரங்கு அம்மை தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குரங்கு அம்மை நோய்ப் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் உலக சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாக சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கு அம்மை பிரதிபலிக்கிறது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், சனிக்கிழமை (23) அறிவித்தார்.
உலக சுகாதாரத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக குரங்கு அம்மையை உலக சுகாதார ஸ்தாபனம் கருதுவதுடன், தொற்றுநோயாக அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகில் 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஜூன் பிற்பகுதியிலிருந்து ஜூலை ஆரம்பத்தில் 77% ஆகஅதிகரித்துள்ளது.
ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் தற்போது தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் இருந்து பெரும்பாலும் பதிவாகிய குரங்கு அம்மை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில், வெளிநாட்டு பயண வரலாறை கொண்டிராத முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் ஒருவர் டெல்லியில் பதிவாகியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கேரளாவில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் அடையாளம் காணப்பட்டவர் வெளிநாட்டு பயண வரலாறை கொண்டிராத நபர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.