5 இடங்களில் கியூஆர் முறைமை தோல்வி !!
நாடளாவிய ரீதியில் உள்ள 20 இடங்களில் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு அல்லது கியூஆர் குறியீட்டு முறைமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, 5 இடங்களில் குறித்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
முற்பதிவுகள் வழங்கப்படாமை, முற்பதிவினை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விநியோகம் என்பனவே இதற்கான காரணங்களாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் (24) வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தாவது,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 25 இடங்களில் இந்த முறைமை சோதனை செய்யப்பட்டதாகவும் நாடளாவிய ரீதியில் 20 இடங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் அதன் கீழ் 4,708 வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கியூஆர் குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்கும் முன்னோடித் திட்டம் ஏனைய ஐந்து இடங்களிலும் அடுத்த இரண்டு நாட்களில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கியூஆர்குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெறுவதற்கு சனிக்கிழமை (23) இரவு வரை 35 இலட்சத்து 23,729 பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.