;
Athirady Tamil News

உக்ரைன் போர் 150-வது நாளை எட்டியது..!!

0

தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில் உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நேற்று 150-வது நாளை எட்டியது. நேற்றைய நாளில் இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன. அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரெயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. விமானப்படை தளத்தின் மீது 13 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் விமானப்படை வீரர் ஒருவர் உள்பட 3 பேர் பலியானதாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் பிராந்திய கவர்னர் ஆண்ட்ரி ரைகோவிச் தெரிவித்தார். இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. ரஷிய படைகளின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக தெற்கு கெர்சான் பிராந்தியத்தில் உள்ள டினீப்பர் ஆற்றுபாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தனர். இந்த நிலையில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்ட சில மணி நேரத்துக்குள்ளாக ரஷிய படைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தின. கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் துறைமுகத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க வௌியுறவு அமைச்சகம் பலியான அமெரிக்கர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், தேவையான அனைத்து தூதரக சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.