கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஜோ பைடன் குணமடைந்து வருகிறார்- மருத்துவர் தகவல்..!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜோ பைடன் ஒமைக்ரான் வைரஸ் துணை வகையை சேர்ந்த BA5 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் கெவின் ஓ கானர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா வைரசால் தற்போது அமெரிக்காவில் 70 முதல் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் அமெரிக்க அதிபர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக மருத்துவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோ பைடனுக்கு, இருமல், தொண்டை புண் மற்றும் உடல் வலி இருந்தாலும் அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம், நுரையீரல் செயல்பாடு, உடல் வெப்ப நிலை சீராக உள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பைடன் போட்டிருந்த நிலையில், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.