யாழில்.பொது போக்குவரத்துக்கள் முடங்கின!
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை.
அதேவேளை எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடவில்லை.
சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்து, தூர பேருந்து சேவையும் இடம்பெறவில்லை.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் , பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக நீண்டகாலத்திற்கு பின்னர் இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்ல சிரமங்களை எதிர்கொண்டனர்.