பயணிகளை நட்டாற்றில் விட்ட பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கம் – வடமராட்சி திரும்ப முடியாது பலர் தவிப்பு!!!
பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினர் தம்மை நட்டாற்றில் விட்டு சென்றுள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ். மாவட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து சங்கத்தினர் உள்ளிட்டோர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையே இரு தரப்பினரும் அறிவித்து இருந்தனர்
இந்நிலையில் இன்றைய தினம் காலை பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினர் ( 750 சாலை வழித்தட) பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தமது சேவையை நடாத்தினார்கள்.
தாம் டீசல் கோரி போராடிய போது , தமக்கு ஆதரவாக மற்றைய சங்கங்கள் போராடவில்லை என்றும் , அதேவேளை தமக்கான டீசலை பருத்தித்துறை சாலை (டிப்போ) வழங்குவதாகவும் தெரிவித்து அவர்கள் சேவையில் ஈடுபட்டனர்.
அதனால் வடமராட்சி பக்கங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு , வேலை நிமிர்த்தம் வருபவர்கள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வருபவர்கள் , மாதாந்த கிளினிக் வருபவர்கள் , பணியிடங்களுக்கு வரும் ஊழியர்கள் என பலரும் வந்திருந்தனர்.
அந்நிலையில் திடீரென பருத்தித்துறை தனியார் பேருந்து சங்கத்தினர் தமது சேவையை இடைநிறுத்தி உள்ளனர்.
” தமக்கு ஏனைய சங்கங்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டமையாலும் , தாம் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டால் , தமது பேருந்துகளுக்கு பாதிப்பு என்பதாலும் தாம் சேவையில் இருந்து விலகுவதாக பருத்தித்துறை சாலை சாரதிகள் தெரிவித்தனர்.
அதேவேளை , இவர்கள் காலையில் சேவையில் ஈடுபடாமல் தவிர்த்து இருந்தால் , நாம் எமது தேவைகளை பொறுத்து வேறு போக்குவரத்து மார்க்கங்கள் ஊடாக யாழ்ப்பாணம் போய் வந்திருப்போம்.
இவர்கள் காலையில் சேவையில் ஈடுபட்டமையாலையே இவர்களை நம்பி நாம் இவர்களின் பேருந்தில் வந்தோம். அவர்களை நம்பி வந்த எம்மை நட்டாற்றில் விட்டு சென்று விட்டார்கள். நாம் வீடு திரும்ப வழியின்றி தவிக்கின்றோம் என்கின்றனர் வடமராட்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு வந்தவர்கள்.
திடீரென இவர்கள் சேவையில் இருந்து விலகியமையால் இவர்களை நம்பி இவர்களின் பேருந்தில் யாழ்ப்பாணம் வந்தவர்கள் திரும்ப செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
யாழில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பருத்தித்துறை பகுதிக்கு சொல்வதாயின் தற்காலத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரையில் கட்டணமாக அறவிடுவார்கள் அதனால் அவர்கள் வேறு போக்குவரத்து மார்க்கங்கள் இன்றி யாழ் நகரில் தவித்து நிற்கின்றனர்.
பின்னணி
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக (ஞாயிறு , திங்கள்) பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடவில்லை.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”