இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் அதிகம்..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 2,021, மகாராஷ்டிரத்தில் 2,015, தமிழ்நாட்டில் 1,945, மேற்குவங்கத்தில் 1,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் புதிதாக 1.37 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. இது முந்தைய வார பாதிப்புடன் (1.28 லட்சம்) ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் அதிகம் ஆகும். தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் 4,477 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு முந்தைய வாரத்தில் 3,280 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வாரத்தில் மட்டும் 37 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதேபோல அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் ஒரு வார பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் பாதிப்பு சரிந்து வருகிறது. தொற்று பாதிப்பால் மேலும் 41 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,26,074 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 18,148 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,50,877 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,323 குறைவு ஆகும். நாடு முழுவதும் நேற்று 16,82,390 டோஸ்களும், இதுவரை 202 கோடியே 17 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 2,39,751 மாதிரிகள் பரிசோதனைகளும், இதுவரை 87.27 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.