ஒமிக்ரோன் உப பிறழ்வு வேகமாக பரவுகிறது !!
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபின் உப பிறழ்வு வேகமாகப் பரவி வருவதாகவும் நாட்டில் அது கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே மேற்குறிபிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டுமொரு கொரோனா அலை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
அவசியமற்ற ஒன்று கூடல்கள் மற்றும் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தி, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, பொது இடங்களுக்குச் செல்லும்போதும் பயணத்தின்போதும் முகக்கவசத்தை அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சு, பரவலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.