ஜனநாயகத்துக்கு பதிலாக இன்று காணப்படுவது அரச வன்முறையே!!

இந்நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தின் மீதான முதலாவது தாக்குதல் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அரச வன்முறையை பிரயோகித்த வன்னம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக பிரதமர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதியை நாட்டை விட்டும் வெளியேற்றும் வரை அது நீண்டு சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடந்த செயல்முறை மூலம் புதிய பயணத்தை எதிர்பார்த்திருந்த அனைவரும் அதற்கு பதிலாக அரச வன்முறையையே அனுபவிக்க நேரிட்டதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று அந்த அரச வன்முறை தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது எனவும், புதிய பயணத்திற்குப் பதிலாக, பழைய வன்முறைப் பயணமே நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அறுபத்தி ஒன்பது இலட்சம் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் மக்களின் போராட்டங்களினால் நாட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட நிலைமைக்கு மத்தியில் இனி ஒரு போதும் வேறு எவருக்கும் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
தேசிய மறுசீரமைப்புகளுக்கான இயக்கத்தின் விசேட கூட்டம் இன்று (25) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் முற்போக்கான நாட்டை உருவாக்கு சாதகமான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்துறையினர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். நியமிக்கப்பட்டுள்ள சர்வாதிகாரிக்கு இந்நாட்டில் ஜனநாயகத்தை முடக்கி மிலேச்சத்தனமான ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதோடு, ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்து முறையான முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.