ஆந்திராவில் நடந்த கார் விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!
அரசு மாியாதையுடன் அடக்கம்
பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அவினாஷ் மற்றும் போலீஸ்காரராக பணியாற்றிய அனில் முல்லிக் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த கார் விபத்தில் பலியானார்கள். போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை பிடிக்க ஆந்திரா சென்றிருந்த போது விபத்தில் சிக்கி 2 பேரும் பலியாகி இருந்தார்கள். அவர்களது உடல்கள் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவினாசின் சொந்த ஊரான பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகா ரோலாவாடி கிராமம் ஆகும். அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. கிராம மக்கள், பீதர் மாவட்ட போலீசார் திரண்டு வந்து அவினாஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் கிராமத்திலேயே துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மாியாதையுடன் சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
போலீஸ் கமிஷனர் நலம் விசாரிப்பு சப்-இன்ஸ்பெக்டராக 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த அவினாஷ், ஐ.பி.எஸ். ஆக திட்டமிட்டு, அதற்காக படித்து வந்ததாகவும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கூறினாா்கள். மேலும் அவினாசுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விபத்தில் பலியான போலீஸ்காரர் அனில் முல்லிக்கின் உடல் நேற்று காலையில் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா சிக்கலகெரே கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அரசு மாியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் சிவாஜிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான தீக்சித் படுகாயம் அடைந்திருந்தார். அவர், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டு இருந்தார். இதையடுத்து, நேற்று மதியம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர் தீக்சித்தின் உடல் நலம் விசாரித்தார்.