கப்பலில் இருந்து விழுந்த நபர் 12 மணி நேரத்துக்கு பின் மீட்பு! இரவு முழுவதும் கடலில் தவித்த கொடுமை..!!
சீனாவைச் சேர்ந்த கடற்பயணி ஒருவர் சுறா மீன்கள் அதிகம் உலாவும் கடலுக்குள் கப்பலில் இருந்து தவறுதலாக விழுந்தார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் நடந்துள்ளது. அவர் கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்டுள்ளார். ஒருநாள் இரவு முழுவதும் அவர் கடலில் தத்தளித்தபடியே உயிர் பிழைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் சீன சரக்கு கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். 30 வயது ஆன அந்த நபர் கிட்டத்தட்ட 12 மணி நேரம் கடலிலேயே தவித்துள்ளார். இந்த தகவலை அறிந்ததும் அவரை மீட்க ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பலில் குழுக்கள் விரைந்தன. ஆனால் இருள் சூழ்ந்த நேரத்தில் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய முடியாமல் அவர்கள் தவித்தனர். இந்த நிலையில் இன்று காலை கடற்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கடலில் அவர் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் இப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியானது சுறா மீன்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இடமாகும். அங்கு நீந்துவோர் மற்றும் கடல் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவோர் சுறா தாக்குதலுக்கு உள்ளாவது அரிதான நிகழ்வாகவே இருப்பினும், ஒரு நாள் இரவு முழுக்க கடலில் வாழ்ந்து உயிர்பிழைத்துள்ளார் இந்த அதிசய மனிதர்.