குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன், இளையராஜா சந்திப்பு..!!
விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் அவர் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்ற பிறகு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது அழைப்பின்பேரில் டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இளையராஜா சந்தித்தார். முன்னதாக பாராளுமன்ற அலுவலகத்தில் இளையராஜாவிற்கு சால்வை அணித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட, இசைஞானி இளையராஜா சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று தமது டுவிட்டர் பதிவில், மந்திரி எல். முருகன் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை மந்திரி முரளிதரனும் உடன் இருந்தார்.