பாஜக அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் சிறையில் அடைக்க சொல்கிறார்- பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை விஜய்சவுக் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை இழுத்துச் சென்று கைது செய்தனர். ராகுல்காந்தி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடக்கு நீருற்று பகுதி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 6 மணி நேரத்திற்கு பின்னர் ராகுல்காந்தி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி, அக்னிபாத் உள்ளிட்டவை குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களை சிறையில் அடைக்குமாறு இந்த நாட்டின் ராஜா உத்தரவிட்டுள்ளார் என்று பிரதமர் மோடி குறித்து புகார் தெரிவித்தார். பாராளுமன்றத்திற்கு உள்ளே விவாதம் நடத்த அனுமதி அவர்கள் மறுப்பதாகவும், வெளியே எங்களை அவர்கள் கைது செய்கிறார்கள் என்றும் ராகுல் கூறினார். தாம் போலீசார் காவலில் வைக்கப்பட்டாலும், மக்களுக்காக குரல் எழுப்புவதை அவர்கள் குற்றம் என்று சொன்னாலும், ஒருபோதும் எங்கள் உறுதிபாட்டை அவர்களால் உடைக்க முடியாது என்றும் ராகுல் குறிப்பிட்டார்.