புதிய விமான நிலையத்தை எங்கே அமைப்பது? – மத்திய மந்திரியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை..!!
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று அவர், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது தமிழக தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழக அரசு இல்ல உறைவிட ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- சிவில் விமான போக்குவரத்து மந்திரியிடம் பல்வேறு விஷயங்களை விவாதித்தோம். சென்னையில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து விவாதித்தோம். ஏற்கனவே 4 இடங்களை தேர்வு செய்து விமான நிலைய ஆணையத்துக்கு அனுப்பியபோது அதில் கல்பாக்கம், தாம்பரம் ஏர்வேஸ் ஆகிய 2 இடங்கள் தகுதியாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்களில் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவந்தது.
இந்த 2 இடங்களுக்கான ‘சைட் கிளியரன்ஸ்’ பற்றி மந்திரியுடன் விவாதித்தோம். ‘சைட் கிளியரன்ஸ்’ தந்து விட்டால் முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி எந்த இடம் என முடிவு செய்து முன்மொழிவு கொடுப்போம்.
விமான பயிற்சி பள்ளி
இதைப்போல கோவை, திருச்சி போன்ற தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களின் விரிவாக்க பணிகள் குறித்தும் விவாதித்தோம். நில எடுப்பு பணிகள், பாதுகாப்புத்துறை இடங்கள் குறித்தும் ஆலோசித்தோம். சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதி அமைக்க இடம் ஒதுக்கித்தரவும் கேட்டு இருக்கிறோம். அதைப்போல கரூரில் விமான நிலையம் அமைக்கவும் கேட்கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக மந்திரி வாக்குறுதி தந்து இருக்கிறார். மதுரை விமான நிலையத்தை 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சர்வதேச விமான நிலையம் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். அங்கு விரிவாக்கப் பணிகளை பொறுத்தவரை ஏறக்குறைய 90 சதவீதம் முடிந்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் விமான பயிற்சிப்பள்ளி அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சேலம் விமான நிலையத்தில் அமைக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தோம் என்று அவர் கூறினார்.