எதிர்வரும் மாதத்திற்கான எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றதாகவுள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர்!!
எரிபொருள் கொள்முதலுக்காக கட்டணம் செலுத்திய கப்பல்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன. எதிர்வரும் மாதத்திற்கான எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றதாக உள்ளது.
சீனா, இந்தியாவிடமிருந்து சாதகமாக பதில் இதுவவரை கிடைக்கப்பெறவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் மாத்திரமே ஏனைய நாடுகள் நம்பிக்கையுடன் ஒத்துழைப்பு வழங்கும்.
இந்தியா மாத்திரமே நெருக்கடியான சூழ்நிலையில் கடனுதவி திட்டத்தின் ஊடாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க தெரிவித்தார்.
நாட்டின் உள்ளக அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள் பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முழுமையாக தாமதப்படுத்தியுள்ளன.
அரசியல் ஸ்தீரத்தன்மையில்லாவிடின் பொருளாதார நெருக்கடி மேலும் ஒப்பிட முடியாத அளவிற்கு தீவிரமடையும் என்பதை சகலரும் பொறுப்புடன் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் ஸ்தீரத்தன்மையினை உறுதி செய்தால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகால கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
மத்திய வங்கியின் ஆளுநராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டேன். அன்றிலிருந்து, இதுவரை இரண்டு அரசாங்கங்கள் மாற்றமடைந்துள்ளன.இவ்வாறான ஸ்தீரமற்ற தன்மை எப்பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது.
அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தால் பொருளாதார நெருக்கடி மேலும் பாரதூரமானதாக அமையும்.அரசியல் ஸ்தீரத்தன்மை குறித்து திருப்தியடையும் தன்மை கிடையாது. அரசியல் ஸ்தீரமான முறையில் காணப்பட்டால் பல பிரச்சினைகளுக்கு முன்னேற்றகரமான தீர்வுகளை எட்டியிருக்கலாம்.
அரசியல் நெருக்கடியினால் ஏற்பட்ட காலதாமதம் பல திட்டங்களை தாமதப்படுத்தியது.சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆராயும் போது அவர்கள் அரசியல் ஸ்தீரத்தன்மையை முதனிலைப்பபடுத்துகிறார்கள்.சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் அரசியல் ஸ்தீரத்தன்மை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடான ஊழியர் மட்ட ஒத்துழைப்பை எதிர்வரும் மாதம் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இருப்பினும் அதற்கான நிலையான மற்றும் அமைதியான சூழலை அரசாங்கம் ஸ்தீரப்படுத்த வேண்டும்.நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் மாத்திரமே ஏனைய நிதி பெறல் குறித்து அவதானம் செலுத்த முடியும்.
நாட்டின் உள்ளக அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் பொருளாதார மீட்சி மற்றும் நெருக்கடிக்கான தீர்வு காணல் திட்டங்களை முழுமையாக தாமதப்படுத்தியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தொழினுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டங்கள் முறையாகவே முன்னெடுக்கப்படுகிறது.
சீனாவின் கடன் மற்றும் அபிவிருத்தி திட்டங்களினால் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டின் மொத்த அரச கடனில் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் 7 பில்லியனாக காணப்படுகிறது.
2005ஆம் ஆண்டு பிற்பட்ட காலப்பகுதியில் கட்டுமான நிர்மாண பணிகளுக்காக சீனா பெருமளவிலான கடனுதவியை வழங்கியுள்ளது. மெகா அபிவிருத்திகளுக்காகவே சீனா அதிக கடன்களை வழங்கியுள்ளது.
ஜப்பான் வழங்கும் கடனுக்கான வட்டி மிகவும் குறைவானதாக காணப்படுவதுடன்,ஒழுக்கமானது.சீனா நீண்டகால அடிப்படையில் கடன் வழங்காது.ஜப்பானை காட்டிலும் சீனாவின் கடனுக்கான வட்டி அதிகளவில் உள்ளது.
சீனாவின் கடன் திட்டம் தொடர்பில் ஒவ்வொரு நாடுகளிலும் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
வெளிநாட்டு கையிருப்பை அதிகம் ஈட்டிக் கொள்ளும் வகையிலான அபிவிருத்தி திட்டங்களுக்காக அதிக அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
ஒருசில அபிவிருத்திகளினால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை.கடன் பெறுவது தவறல்ல,இருப்பினும் பெற்றுக்கொண்ட கடனால் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ள வேண்டும். ஜப்பானிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களினால் நாடு அதிக பயனை பெற்றுக்கொண்டுள்ளதை உறுதியாக குறிப்பிட முடியும்.
பதவியேற்கும் போது வெளிநாட்டு கையிருப்புகளில் பாவிக்க கூடிய பெறுமானங்கள் மிகவும் குறைவான மட்டத்தில் காணப்பட்டன.இந்திய கடனுதவி திட்டத்தினால் பல பிரச்சினைகளுக்கு ஒப்பீட்டளவில் தீர்வு காண முடிந்துள்ளது.கடனுதவி திட்டத்தை தொடர்ந்து வழங்குமாறு இந்தியாவிடம் கோரியுள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை முழுமையாக பெற்றுக்கொண்டார் மாத்திரமே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இந்தியா எவ்வித நிபந்தனைகளுமில்லாத நிலையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை பிற நாடுகள் உதவி செய்யாது.அதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு அந்நிய செலாவணி மற்றும் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருள் கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது, அந்த கப்பல்களே தொடர்ச்சியாக நாட்டை வந்தடைகின்றன.
எரிபொருள் இறக்குமதிக்கு மாத்திரம் மாதந்தம் 400 மில்லியனுக்கும் அதிகமான டொலர் அவசியமாகவுள்ளது.இருப்பினும் கைவசமுள்ள பாவிக்க கூடிய கையிருப்பு வரையறுக்கப்பட்டதாகவுள்ளது.
தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை எதிர்வரும் மாதத்தின் முதல்வாரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்க முடியும்.
இருப்பினும் அதற்கு பின்னர் எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றதாக உள்ளது.இந்தியா மற்றும் சீனாவிடம் ஒத்துழைப்பினை கோரியுள்ளோம் இருப்பினும் சாதகமான பதில் கிடைக்கப்பெறவில்லை. தற்போதைய நிலையில் வெளிநாட்டு உதவிகளும் உறுதியற்ற நிலையில் உள்ளன என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”