மேல்சபையில் அமளியில் ஈடுபட்ட மேலும் ஒரு எம்.பி. இன்று சஸ்பெண்டு..!!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். நேற்று மேல்சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 13 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுவதாக சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். அவர்கள் இந்த வாரம் முழுவதும் (29-ந்தேதி வரை) சபைக்கு வர தடை விதிக்கப்பட்டது. சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களில் தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 7 எம்.பி.க்கள், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த 2 பேரும், இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ஒருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேல்சபையில் இன்று மேலும் ஒரு எம்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டார். இன்று காலை மேல்-சபை கூடியது. அப்போது மேல்-சபையின் நேற்றைய கூட்டத்தின்போது காகிதங்களை கிழித்து அதை அவைத்தலைவரின் இருக்கை முன்பு எறிந்த காரணத்திற்காக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய்சிங், இந்த வாரம் முழுவதும் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.