நாட்டின் நலன் கருதி அக்னிபாத் திட்டதை உடனே திரும்ப பெறவேண்டும்- திரிணாமுல் காங். எம்.பி. வலியுறுத்தல்..!!
மக்களவையில் இன்று, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், அக்னிபாத் விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசியதாவது:- ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற ஓய்வூதிய பலன்கள் இல்லாமல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்படுவார்கள். மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அரசின் இந்த கொள்கைகள் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், 4 வருடங்கள் கழித்து அவர்களின் வாழ்க்கை என்னவாகும் என கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் போராட்டம் நடத்துகின்றனர். ஏராளமான இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று, போதுமான வாழ்வாதாரம் இல்லாமல் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், இது சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நாட்டின் நலன் கருதி அக்னிபாத் திட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.