மாமல்லபுரம் நுழைவுவாயிலில் 45 அடி உயர சிற்பக்கலை தூண் – முதல்-அமைச்சர் திறந்து வைப்பு..!!
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தின் கற்சிற்ப கைவினைஞர்களின் கற்சிற்பங்களை உலகளவில் எடுத்து செல்லும் வகையில் பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக “கைவினை சுற்றுலா கிராமம்” என்ற திட்டம் மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட கலைநயமிக்க “சிற்பக்கலைத் தூண்” அமைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மாமல்லபுரத்தில் நாளை 44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெறும் நிலையில் போட்டியை காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக் கலைத்தூண் அமைந்துள்ளது.