ரூ.800 கோடி கைமாறிய விவகாரம் குறித்து “எனக்கு எதுவும் தெரியாது”- அமலாக்கத்துறையிடம் சோனியாகாந்தி பதில்..!!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடந்து இருப்பதாகவும் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை யங் இந்தியா அபகரித்து கொண்டதாகவும் பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பண மோசடி தொடர்பாக அமலாக்கதுறை அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான மல்லிகார் ஜூனே கார்கே மற்றும் காங்கிரஸ் பொருளாளர் பவன் குமார் பன்சால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் ராகுல்காந்தி எம்.பி.யிடம் அடுத்தடுத்து 5 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி கடந்த 21-ந்தேதி முதல் முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது முறையாக சோனியா காந்தியிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக சோனியா டெல்லியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் யங் இந்தியா நிறுவனத்தில் உங்கள் பங்களிப்பு என்ன? இதில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததா? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். நேற்று காலை, மாலை என மொத்தம் 6 மணி நேரம் அவரிடம் இந்த விசாரணை நடந்தது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளித்தார் அந்த பதில்கள் அனைத்தையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்த சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ரூ. 800 கோடி கை மாறியது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டனர். அதற்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் மறைந்த முன்னாள் காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா தான் இதனை கையாண்டதாவும் சோனியா காந்தி கூறியதாக தெரிகிறது. மேலும் மோதிலால் வோரா தான் கட்சியின் வரவு- செலவு கணக்குகள் அனைத்தையும் தனியாக பார்த்ததாகவும், அவருக்கு தான் இது பற்றிய முழு விவரமும் தெரியும் என்றும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.