போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்பதாக ஜனாதிபதி அறிவிப்பு!!
நாட்டில் உள்ள முறைமையை மாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (27) பிற்பகல் புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அதன் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.
நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் அனுமதி உண்டு எனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அதே உரிமை உண்டு எனவும் பல்வேறு திறமைகளை கொண்ட இளைஞர் யுவதிகள் இதில் இணைவதை தான் பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.
நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த வேளையில் தான் ஜனாதிபதியாக பதவியேற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.