இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டி.பி. வைக்கும் இளம்பெண்களே உஷார்..!!
மும்பை, ஆண்டோப் ஹில் பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது மேலும் பல இளம்பெண்கள் தங்களுக்கும் இதுபோன்ற மிரட்டல் வருவதாக கூறினர். இதையடுத்து மும்பை உதவி போலீஸ் கமிஷனர் அஸ்வினி பாட்டீல் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார், மிரட்டல் வாலிபரை தேடினர். மேலும் பெண்களின் ஆபாச படங்கள் பதிவிடப்பட்ட செல்போன் ஐ.டி. மூலம் அதனை பதிவிட்ட நபரை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இதில் பெண்களின் ஆபாச படங்களை பதிவிட்டது குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் ஆதித்யா (வயது 19 ) என தெரியவந்தது. தனிப்படை போலீசார் காந்தி நகர் சென்று வீட்டில் பதுங்கி இருந்த பிரசாந்த் ஆதித்யாவை கைது செய்தனர். பின்னர் அவரை மும்பை அழைத்து வந்து விசாரித்தனர். இதில் பிரசாந்த், 22-க்கும் மேற்பட்ட பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- பெண்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைத்துள்ள டி.பி. படங்களை பதிவிறக்கம் செய்து அதனை பிரசாந்த் ஆபாசமாக சித்தரித்து உள்ளார். அந்த படங்களை மீண்டும் அந்த பெண்களுக்கு திருப்பி அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். உடனே பணம் கொடுத்தால் ரூ.500 என்றும், தாமதமாக தந்தால் ஒவ்வொரு நாளைக்கும் ரூ.1000 வீதம் கூடுதலாக தரவேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். பிரசாந்த்திடம் இதற்கு முன்பு ஒரு நபர் இதுபோல செல்போனில் மிரட்டி பணம் பறித்து உள்ளார். அவரிடம் பணத்தை இழந்த பிரசாந்த், தானும் இதுபோல மிரட்டி பணம் பறிக்க முடிவு செய்துள்ளார். முதலில் ஒருசிலரை மிரட்டி பணம் வாங்கியபோது யாரும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. எனவே அவர் இதனை தொடர்ந்துள்ளார். பணத்தை தனது கணக்குக்கு அனுப்பாமல் நண்பர்களின் கணக்குக்கு அனுப்ப கூறியுள்ளார். இதற்காக அவர்களுக்கு கமிஷனும் வழங்கி உள்ளார். கைதான பிரசாந்த் 10-ம் வகுப்பு பெயில் ஆனவர். மும்பையில் உள்ள ஒரு மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.