நாட்டின் பாதுகாப்பிற்கு புதிய வகை ஆயுதங்களை தயாரிப்பது அவசியம்- பாதுகாப்புத்துறை மந்திரி வலியுறுத்தல்..!!
பாதுகாப்புத்துறையில் உற்பத்திக்கான இந்திய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும் இந்திய கடற்படை, பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரால் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஆயுதங்கள் குறித்த கண்காட்சியையும் திறந்து வைத்த அவர், நவீன ஆயுதங்களை பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இனி வரும் நவீன போர்க்காலங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களே தேவை. பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.ட்டின் பாதுகாப்பிற்கும், எதிர்கால சவால்களை ராணுவ வீரர்கள் எதிர்கொள்வதற்கு வலிமையான மற்றும் தற்சார்பு அடிப்படையிலான புதிய வகை ஆயுதங்களை தயாரிப்பது அவசியம். இதற்காக ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் உள்நாட்டுத் திறன் ஆகியவற்றின் மீதான நமது நிலைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஆயுத உற்பத்தி வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியமாகிறது. உலகில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாடங்களை வடிவமைத்து உற்பத்தி செய்ய வேண்டும். பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு மூலம் அத்துறை வலுப்பெறும். இதை உணர்ந்து மத்திய அரசு இத்துறையில் தனியார் துறை பங்கேற்பதற்கான பல்வேறு தடைகள் நீக்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.