செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!!
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க 187-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு இதையொட்டி நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடக்க விழா ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
நேரு ஸ்டேடியத்தில் செஸ் போட்டி தொடக்க விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையை பார்வையிட்ட முதல்-அமைச்சரிடம் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா ஆகியோர் விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கி கூறினர். அழகுற வடிவமைக்கப்பட்ட மேடை இதன்பின்பு நேரு உள் விளையாட்டு அரங்கின் நுழைவு வாயிலில் செஸ் காய்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட அலங்கார வளைவுகளையும், ஒலிம்பியாட் போட்டி சின்னமான தம்பி உருவ பொம்மைகள் பார்வையாளர்களை கவரும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதையும், மேடையில் ஆங்காங்கே பிரமாண்ட செஸ் காய்கள் இருக்கும் வகையில் அழகுற மேடை வடிவமைக்கப்பட்டுள்ளதையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மாமல்லபுரத்தில் ஆய்வு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம், பூஞ்சேரி போர்பாயிண்ட்ஸ் விடுதி வளாகத்தில் செஸ் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நவீன உள் விளையாட்டரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை, தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கு உள்ளிட்ட பல்வேறு கண்காட்சி அரங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். செஸ் விளையாடினார் அதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் இந்திய செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடினார். செஸ் விளையாடினார். சிற்பக்கலை தூண் மாமல்லபுரத்தின் கற்சிற்ப கைவினைஞர்களின் கற்சிற்பங்களை உலகளவில் எடுத்து செல்லும் வகையில் பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக “கைவினை சுற்றுலா கிராமம்” என்ற திட்டம் மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட கலைநயமிக்க “சிற்பக்கலை தூண்” அமைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சதுரங்க வீரர்களை கவர மாமல்லபுரத்தில் 28-ந் தேதி (இன்று) முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்க போட்டியில் பங்குபெறும் சதுரங்க வீரர்களையும், போட்டியை காண வருகை புரியும் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக்கலை தூண் அமைந்துள்ளது. இந்த கலை தூண் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.பாலாஜி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் வெ.ஷோபனா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.