பிளஸ்-2 மாணவி இறப்பு விவகாரம்: சின்னசேலம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கேட்டு மனு..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றபுஷ்பராணி அனுமதி வழங்கினார். அதனைதொடர்ந்து 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி கூடுதல் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அவர்களிடம் கனியாமூரில் நடந்த பள்ளி மாணவி இறப்பு விவரம், அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு 5 பேரும் பதில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவினை அவர்களது வக்கீல்கள் தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வரும்போது ஜாமீன் கிடைக்குமா? என்பது பின்னர் தெரியவரும்.