;
Athirady Tamil News

செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி படம்- தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

0

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு சில இடங்களில் இந்து முன்னணியினர் முதலமைச்சரின் படத்திற்கு மேலே பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டிச் சென்றனர். சென்னை அடையாறு பகுதியில் இருந்த பேனர்களில் பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டிச் சென்றனர். இதையடுத்து அங்கு வந்த பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படம் மீது கருப்பு வண்ண ஸ்பிரே அடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் பெயர் இடம்பெறாத விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை சேர்க்கவேண்டும் என கோரிக்கை இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற கிளையில் சற்று முன்பு நடைபெற்றது. அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமை மிக்கது. ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இன்றைய நாளிதழில் கூட செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படம் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறிய தமிழக அரசு மோடி படம் இடம்பெறாததற்கு மன்னிட்பு கேட்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை சேர்க்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.