பள்ளிக்கூடம் முன் காத்திருந்த மாணவர்கள்..!!
லாஸ்பேட்டையில் நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வழக்கமாக காலை 8 மணிக்கு திறக்கப்படும். பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை பெற்றோர் காலையிலேயே கொண்டு வந்துவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். இந்தநிலையில் இன்று காலை 8.30 மணிக்கு மேலாகியும் பள்ளி திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளி முன்பு வெகுநேரம் காத்திருந்தனர். அப்போது ஆசிரியர் ஒருவர் வந்து பள்ளியை திறந்தார். அதன்பின்னரே மாணவர்கள் பள்ளிக்குள் சென்றனர். இந்த பள்ளிக்கு காவலாளி நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் வசம் பள்ளியின் சாவி ஒப்படைக்கப்பட்டு அவர்கள் வரும் நேரத்திலேயே பள்ளி திறக்கப்படுவதால் அதுவரை மாணவர்கள் வெளியே காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. காவலாளி நியமிக்கப்பட்டு காலையிலேயே பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.