இந்தியாவில் விளையாட்டுத்துறை ஒவ்வொரு நாளும் வலிமையுடன் வளர்ந்து வருகிறது மத்திய மந்திரி பேச்சு..!!
இந்திய வரலாற்றில் முதல் முறையாக மதிப்புமிக்க செஸ் போட்டி நடத்தப்படுகிறது. 75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவினை கொண்டாடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர் மகால், உத்தரபிரதேசத்தில் உள்ள தாஜ் மகால், திருப்பதி உள்பட 75 முக்கிய இடங்களுக்கு பயணம் செய்து, மாமல்லபுரம் வந்தடைந்தது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. செஸ் போட்டிக்கு வந்திருக்கும் அனைத்து நாடுகளையும் இந்தியா வரவேற்கிறது. விளையாட்டுத்துறையின் சிறப்புக்கும், உலக அளவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி தொடர்ந்து ஊக்கமும், ஆதரவும் அளித்து வருகிறார். இந்தியாவில் விளையாட்டுத்துறை ஒவ்வொரு நாளும் வலிமையுடன் வளர்ந்து கொண்டே வருகிறது. அடிமட்ட அளவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம். அதனால் பல்கலைக்கழக அளவில் இருந்து, தேசிய அளவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்கு உதவிக்கரமாக இருக்கிறது.
கட்டமைப்புகள்
செஸ் ஓலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாபெரும் வெற்றியானதாக மாற்றுவதற்கு களைப்பின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய குழுவினர், பிடே உள்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். செஸ் போட்டி நமக்கு ஒரு முக்கிய பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. அதனை விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். 2 அடி முன்னோக்கி செல்வதற்கு, 2 அடி பின்னோக்கி செல்லவேண்டும். உங்களின் நிலைப்பாட்டில் அமைதியாக காத்திருக்க வேண்டும். சரியான தருணத்தில் நகரவேண்டும் என்பதுதான் வெற்றிக்கு முக்கிய நகர்வாக இருக்கும். இது தான் செஸ் விளையாட்டு, வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்தமாகவும் இருக்கிறது.
சாதித்து காட்டிய இந்தியா
திறமையின் அடிப்படையில் எதிரியிடம் இருந்து தற்காத்துக்கொண்டு, தந்திரமான நகர்வுகளுடன் முன்னோக்கிய உங்கள் திட்டமிடலை சோதிப்பதுதான் செஸ் விளையாட்டு. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது உந்து திறனாக செயல்பட்டு, குறிப்பாக இளைஞர்கள் பொழுதுபோக்கு மற்றும் தொழில்ரீதியான விளையாட்டாக அதனை தேர்ந்தெடுப்பதற்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமையும். 3 மாத காலத்துக்குள் இந்த போட்டியை நடத்துவது என்பது எளிதானது அல்ல. உலகில் எவருமே அந்த காலத்துக்குள் திட்டமிட்டு நடத்திவிடமுடியாது. ஆனால் இந்தியா அதனை சாதித்து காட்டியிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.