ராதாபுரம் தேர்தல் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 2-ந்தேதிக்கு தள்ளிவைப்பு..!!
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தபால் ஓட்டுகள் 19,20,21 ஆகிய சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்பதுரை வழக்கு தொடர்ந்தார், அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இன்பதுரை சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் அகர்வால், ‘வழக்கு தொடர்பான சட்டப்பேரவை காலம் நிறைவடைந்து விட்டதால், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கை அப்பாவு திரும்பப்பெற்றால் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை’ என வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக எதிர்மனுதாரர் அப்பாவுவிடம் ஆலோசனை பெற்று தெரிவிக்குமாறு அவரது வக்கீலுக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அப்பாவு அதே தொகுதியில் வெற்றிபெற்று தற்போது சபாநாயகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.