கொரோனா தொற்று குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது- மத்திய அரசு..!!
நாட்டில் கொரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா என்றும் 12-18 வயது மற்றும் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் தற்போதைய நிலை குறித்தும் மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அவர், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக பெரியவர்களைவிட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஒமைக்ரான் மற்றும் அதன் துணை தொற்றுகள் 7,362 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஜனவரி 1, 2022 முதல் ஜூலை 25, 2022 வரை 0-18 வயதுடைய குழந்தைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 118 மாதிரிகளில் டெல்டா மற்றும் அதன் துணை தொற்று வகைகள் கண்டறியப்பட்டதாக கூறினார். உலக சுகாதார அமைப்பின்படி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே சார்ஸ் கொரோனா தொற்றுகள் பொதுவாக பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான கடுமையான நோயை ஏற்படுத்துகின்றன” என்று பவார் கூறினார். மேலும், நாட்டில் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் 12 வயதிற்குட்பட்ட தடுப்பூசி தொடங்கப்படவில்லை, தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமான தடுப்பூசி அளவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கிடைக்கின்றன என்றார். இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி வரை, 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 9.96 கோடி முதல் டோஸ்கள் (82.2 சதவீதம்) மற்றும் 7.79 கோடி இரண்டாவது டோஸ்கள் (64.3 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.