;
Athirady Tamil News

இரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா? (மருத்துவம்)

0

பொதுவாக பலரும் சந்திக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் வறட்டு இருமல். இந்த வகை இருமல் சளியால் வருவதில்லை. மாறாக வைரஸ் அல்லது இதர நோய்த்தொற்றுகளால் வருவதாகும். இந்த வகை இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்று தொடர்ச்சியாக வரும். இது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குவதோடு, சில சமயங்களில் எரிச்சலுணர்வை உண்டாக்கும்.

நாள்பட்ட வறட்டு இருமல் சைனஸ், ஆஸ்துமா, நிமோனியா, காசநோய் மற்றும் இதர காரணங்களால் வரக்கூடும். நாள்பட்ட வறட்டு இருமலால் அவஸ்தைப்படும் போது, அத்துடன் தொண்டைப் புண், சோர்வு, எரிச்சலுணர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவற்றையும் காணக்கூடும்.

இந்த நாள்பட்ட வறட்டு இருமலில் இருந்து விடுபட ஒருசில எளிய இயற்கை கை வைத்தியங்கள் உள்ளன. உங்களுக்கு வறட்டு இருமல் பிரச்சனைக்கான எளிய வைத்தியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படியுங்கள்.

மஞ்சள் பால்
மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவி, வறட்டு இருமலில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

மிளகு
மிளகில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், வறட்டு இருமலில் இருந்து விடுபட உதவும். உங்களுக்கு வறட்டு இருமல் இரவு நேரத்தில் அல்லது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது அடிக்கடி வருகிறதா? அப்படியானால் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1/2 டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

இஞ்சி
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. மேலும் இதன் காரச் சுவை, வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு துண்டு நற்பதமான இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். இதனால் வறட்டு இருமல் வருவது தடுக்கப்படுவதோடு, செரிமான பிரச்சனைகளும் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள மருத்துவ பண்புகள், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, வைட்டமின் சி வறட்டு இருமலை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். அத்தகைய எலுமிச்சையின் சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் பலமுறை குடித்து வர, தொல்லைத் தரும் வறட்டு இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

தேன்
தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கற்றாழை
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள வலி நிவாரண பண்புகள், தொண்டைச் சுவற்றில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும். அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

வெங்காயம்
வறட்டு இருமலுக்கு வெங்காயம் ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களில் இருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் வெங்காய சாற்றில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் 2 வேளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொல்லைமிக்க வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

ஆவி பிடிப்பது
யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

சூடான சூப்
சூடான சூப்பைக் குடித்தால், அது தொண்டையில் உள்ள அரிப்பைத் தடுப்பதோடு, வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதிலும் சிக்கன் சூப் குடிப்பது வறட்டு இருமலுல் மிகவும் நல்லது. அந்த சிக்கன் சூப்பில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

மசாலா டீ
வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற மசாலா டீ உதவும். அதிலும் இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், தொண்டையில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வறட்டு இருமல் பிரச்சனையும் சரியாகிவிடும். அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் இஞ்சி பவுடர், 1 சிட்டிகை பட்டைத் தூள் மற்றும் சிறிது கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டி, தினமும் குடியுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.