அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு!!
யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று இளைஞர் ஒருவருக்கு எதிராக வலி,கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வலி.கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று அச்சுவேலியில் அமைந்துள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அச்சுவேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தினமும் ,வந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் நிற்கும் ஊழியர்களை வீடியோ எடுத்து அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொள்வது , அவர்களுடன் முரண்படுவது , எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்த முனைதல் போன்ற செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து ஊழியர்களை தகாத வார்த்தைகளால் ஏசி அவர்களை அச்சுறுத்தும் வகையில் காணொளி பதிவுகளை மேற்கொண்டு அவர்களின் கடமைகளும் இடையூறு விளைவித்துள்ளார்.
இந்த சம்பவங்களின் அடிப்படையில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடும் சிலர் அங்கு வேண்டும் என்றே குழப்பங்களை ஏற்படுத்தி எரிபொருள் விநியோகத்தை சீராக மேற்கொள்ள முடியாத அளவுக்கு தடையாக உள்ளனர். இதனால் எரிபொருள் பெற வருவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற விதங்களில் ஒன்று கூடுபவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”