சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!
டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாவட்ட சட்ட சேவை அதிகாரிகளுக்கான முதலாவது கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில், இந்தியாவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டன. மின்னணு நீதிமன்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் மெய்நிகர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக 24 மணி நேர நீதிமன்றங்களும் தொடங்கப்பட்டுள்ளன. காணொலி மூலம் விசாரணை உள்பட நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு சமூகத்திற்கும் நீதித்துறை அணுகுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விரைந்து நீதி வழங்குவதும் முக்கியமானது. எளிதாக தொழில் தொடங்குவது மற்றும் எளிதாக வாழ்வது போன்றே எளிதாக நீதி கிடைப்பதும் முக்கியமானது. பல்வேறு சிறைகளில் சட்ட உதவிக்காகக் பல விசாரணைக் கைதிகள் காத்திருக்கின்றனர். சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் விசாரணைக் கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்ட சேவை அதிகாரிகள் ஏற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.